பின்னலூர் கிராமத்தில் குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்: வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் ஊராட்சி, புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 2000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் இக்கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள்  உள்ளிட்டவைகளை எடுத்து சென்றுவிடுகின்றது. அதனை குடியிருப்புவாசிகள் பிடுங்க முயலும்போது துரத்தி கடிக்க முயல்கின்றது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சமடைந்து வருகின்றனர்.

குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அப்பகுதி வாசிகள் இதுகுறித்து கூறுகையில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாகவும், வீட்டில் எந்த பொருட்களையும் வைத்திருக்க முடியவில்லை. குடிநீர் டேங்கின் மீது ஏறி குடிநீரையும் அசுத்தம் செய்து வருகிறது என வேதனையுடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: