×

களக்காடு முண்டந்துறை காப்பகத்தின் அம்பை கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது

வி.கே.புரம்: நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பை கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. முதன்முதலாக ஆண்ட்ராய்டு செயலி மூலம் துல்லியமாக விவரங்களை சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இதுவரை 4 முறை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. இந்த ஆண்டு 5வது அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த கணக்கெடுப்பு 4 நிலைகளை கொண்டுள்ளது. இவற்றில் முதலாம் மற்றும் மூன்றாம் நிலை கணக்கெடுப்பு மட்டும் தற்போது நடக்கிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அம்பை (29 பீட்கள்), களக்காடு (21 பீட்கள்) ஆகிய 2 வனக் கோட்டங்கள் உள்ளன. அம்பை கோட்டத்தில், அம்பை, முண்டந்துறை, பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகங்களும், களக்காடு கோட்டத்தில் திருக்குறுங்குடி, களக்காடு, அப்பர் கோதையாறு ஆகிய வனச் சரகங்களும் உள்ளன. இந்த 2 கோட்டங்கள் மற்றும் அருகில் உள்ள நெல்லை வன உயிரின சரணாலயம், கன்னியாகுமரி வன உயரின சரணாலயம் ஆகிய இடங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

அம்பை கோட்டத்தில் உள்ள அம்பை, முண்டந்துறை, பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகங்களில் இன்று புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. காகிதமில்லா முறையில் இதற்காக சிறப்பாக இந்திய வன உயிரின நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த செயலி மூலம், மிக துல்லியமாக, மனித தவறுகள் இன்றி விவரங்களை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சரியான முறையில் இயக்குவதற்கான பயிற்சி வகுப்பு, வனச் சரக வாரியாக அனைத்து களப்பணியாளர்களுக்கும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த களப்பணியாளர்கள் வனத்தில் அமைக்கப்பட்டுள்ள வேட்டை தடுப்பு முகாம்களில் தங்கி 8 நாட்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றனர். இந்த கணக்கெடுப்பில் புலிகள் மற்றும் பிற மாமிச உண்ணிகள், மறைமுக மற்றும் நேரடி தடயங்களை சேகரம் செய்தல், நேர்கோட்டு ஆய்வின் மூலம் இரையினங்களை கணக்கிடுதல், வாழ்விட ஆய்வு ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இத்தகவல் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பையிலுள்ள 29 பீட்களில் முதல்நிலை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே களக்காடு கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நிலையில் 25 நாட்கள்

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் மூன்றாம் நிலையாக புலிகள் காப்பகத்தின் முக்கிய மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலிகள் மற்றும் பிற மாசி உண்ணிகள் நடமாட்டம் 25 நாட்களுக்கு கண்காணிக்கப்படும்.

Tags : LTTE ,Kalakadu ,Barracks ,Archive , The LTTE survey began today in the arrow line of the Kalakadu Barracks Archive
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....