×

கவுன்சிலர் சாவில் திடீர் திருப்பம்: சாம்பாரில் விஷம் கலந்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது

வேதாரண்யம்: சாப்பாட்டில் விஷம் கலந்து கவுன்சிலரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(47). கீழையூர் ஒன்றிய திமுக கவுன்சிலர். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று கடந்த டிசம்பர் 15ம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தேவேந்திரனின் உடல் அன்றே அவரது ஊருக்கு கொண்டு வரப்பட்டு அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. தேவேந்திரனின் இறப்புக்கு பிறகு அவரது மனைவி சூர்யா(26) தினம்தோறும் தனிமையில் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்து சூர்யாவின் செல்போனை தேவேந்திரனின் உறவினரான சதீஷ்கண்ணா ஆய்வு செய்தார். அப்போது தேவேந்திரன் மனைவி சூர்யாவுக்கும், தேவேந்திரன் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகரன்(32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து சந்திரசேகரனிடம் தேவேந்திரன் உறவினர்கள் விசாரித்தனர். அப்போது சந்திரசேகரன் தனக்கும், சூர்யாவுக்கும் கடந்த 3 மாதமாக கள்ளத்தொடர்பு இருந்து வருகிறது. கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தேவேந்திரனை கொல்ல முடிவு செய்தேன். கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை தேவேந்திரன் சாப்பிட்ட உணவில் (சாம்பார்) எலி பேஸ்டை கலந்தேன். நான் எலிபேஸ்ட் கலந்தது சூர்யாவுக்கும் தெரியும் என்றார்.

இதையடுத்து கள்ளக்காதலன் சந்திரசேகரனும், சூர்யாவும் வேட்டைக்காரனிருப்பு விஏஓ பிரபாகரனிடம் நேற்று சரணடைந்தனர். பின்னர் வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து சூர்யா, சந்திரசேகரனை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி சந்திரசேகரன் நாகை கிளை சிறையிலும், சூர்யா அங்கேயே உள்ள மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags : Sambar , Councilor's death twist: Wife, false lover arrested for poisoning in Sambar
× RELATED சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்