துப்பாக்கி சூடு நடத்தி சிறுவர்களை விரட்டிய அமைச்சரின் மகன்; தர்மஅடி போட்ட பீகார் மக்கள்

சம்பரன்: பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டம் ஹர்டியா கிராமத்தில் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சரின் மகன் பப்லு பிரசாத், சிறுவர்களை விரட்டினார். ஒருகட்டத்தில் சிறுவர்களை பயமுறுத்துவதற்காக துப்பாக்கியை காட்டி தாக்கினார். மேலும் சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தால் சிலர் காயம் அடைந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், அமைச்சரின் வீட்டுக்கு சென்று அவரது காரை அடித்து நொறுக்கினர். மேலும் பப்லுவையும் சரமாரியாக தாக்கினர். தகவலறிந்த போலீசார், அமைச்சரின் வீட்டிற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் நாராயண் பிரசாத் கூறுகையில், ‘எனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க கிராம மக்கள் சிலர் முயன்றனர். அவர்கள் எனது குடும்பத்தினரை தாக்கினர். அதை தடுப்பதற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவரையும் பொதுமக்கள் கற்களால் தாக்கினர். எனது வாகனத்தையும் சேதப்படுத்தினர்’ என்றார். மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவரான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: