×

அபுதாபி மீது மீண்டும் ஏவுகணை வீசி தாக்க முயற்சி!: இடைமறித்து தாக்கி அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தகவல்..!!

அபுதாபி: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்ததாகவும், அவற்றை இடைமறித்து அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் கடந்த 6 ஆண்டுகளாக அரசுக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 17ம் தேதி அபுதாபி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சவுதி தலைமையிலான படை, சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது.

இந்த சூழ்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இரண்டு ஏவுகணைகளை தங்களை நோக்கி வீசியதாகவும், அதனை வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணைகளின் பாகங்கள் அபுதாபியில் விழுந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எதிராக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் அங்கே பதற்றம் அதிகரித்துள்ளது.


Tags : Abu Dhabi ,UAE , Abu Dhabi, Missile, United Arab Emirates
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...