ஈரோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 30% பதவிகளை கேட்க பாரதிய ஜனதா திட்டம்; அதிமுகவினர் டென்ஷன்

ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சி உள்பட 30 சதவீத பதவிகளை கேட்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதால், அதிமுகவினர் டென்ஷன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் வேட்பாளர் நேர்காணல் நடத்துதல், பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, சத்தியமங்கலம் ஆகிய நகரமன்ற தலைவர் பதவி பெண்களுக்கும், புஞ்சைபுளியம்பட்டி நகரமன்ற தலைவர் பதவி எஸ்.சி, பொது என தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்ற திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் பதவிகளையும், 12 பேரூராட்சி தலைவர் பதவிகளையும் அதிமுகவிடம் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், குறிப்பாக மொடக்குறிச்சி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதால், இத்தொகுதியில் உள்ள மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி, அவல்பூந்துறை, வெங்கம்பூர், சென்னசமுத்திரம் உள்ளிட்ட பெரும்பாலான பேரூராட்சி தலைவர் பதவிகளை அதிமுகவிடமிருந்து கேட்டு பெற பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று பா.ஜ., நம்புகிறது. பா.ஜ.,வின் இத்திட்டம் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி மட்டுல்லாது 15 முதல் 20 வார்டுகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வலுவாக இல்லாவிட்டால், கட்சியை வளர்க்க முடியாது என்பதால், அதிமுக தலைமை பா.ஜ.,வின் திட்டத்திற்கு அடிபணியக்கூடாது என்று தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: