×

தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை ஏலம் விடுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் 2ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்திய அரசால் வழங்கப்பட்ட குடியுரிமை ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையிலேயே மூழ்கி போன படகுகளுக்கு தமிழக முதல்வர் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் அந்த படகுகளை இலங்கை அரசு நேற்று பகிரங்க ஏலம் விடுவதாக அறிவித்துள்ளதை மீனவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்திய அரசு அதற்கு உரிய எதிர்ப்பு தெரிவிக்காத சூழலில் மீனவர்கள் இன்று அவசர கூட்டம் கூட்டி கோரிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு மீனவனின் உழைப்பும், ரத்தமும், வியர்வையும் சேர்ந்தது அந்த படகு. அந்த படகுகள் இந்திய அரசின் சொத்து. அந்த படகுகளை ஏலம் விடுவதை மீனவர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். இதனை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசு வழங்கியது போல ஒன்றிய அரசும் ஏழை மீனவ குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் மூழ்கிப்போன அந்த படகுகளை எடுத்துக்கொண்டு வருவதற்கு அரசு அனுமதி வழங்க கோரி இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வரும் 2ஆம் தேதிக்குள் ஏலம் விடுவதை தடுத்தி நிறுத்தி இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் இந்திய மக்கள் இல்லை என்று இந்திய அரசு கொடுத்துள்ள ஆவணங்களை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் அந்நிய செலாவணி கொடுக்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அழிந்து வருகிறது. உடனே இலங்கை அரசு படகுகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மீனவர்களின் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்படுகிறது.

Tags : Rameswaram , Fishermen
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...