×

கடலாடி,சாயல்குடி பகுதியில் தண்ணீரின்றி கருகும் நெல், மிளகாய் பயிர்கள்-நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி : கடலாடி, சாயல்குடி பகுதியில் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்தாண்டு கடலாடி வட்டத்தில் சுமார் 48 ஆயிரம் ஏக்கரில் நெல், 20 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டது. கால தாமதமாக வடகிழக்கு பருவமழை பெய்ததால் பெரும்பாலான கண்மாய் போன்ற நீர்நிலைகள் பெருகவில்லை. பாசன வசதிக்காக வைகையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டும் முறையான வரத்து கால்வாய் வசதியின்றி தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் நன்றாக வளர்ந்து வந்த பயிர்கள் கதிர் விடும் தருவாயில் போதிய தண்ணீரின்றி கருக தொடங்கியது.

கடலாடி, மீனங்குடி, பள்ளனேந்தல், நரசிங்கக்கூட்டம், கருங்குளம், பூதங்குடி, சாத்தங்குடி, ஓரிவயல், ஆ.புனவாசல், மங்களம், எம்.கரிசல்குளம், ஒச்சதேவன்கோட்டை, காணீக்கூர், எஸ்.வாகைக்குளம், திட்டங்குளம், புல்லந்தை, எஸ்.கீரந்தை, கட்டலாங்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் நெல் கதிர்விட்ட நிலையில் கருகி கிடக்கிறது. வைக்கோல் கூட அறுக்க முடியாத பரிதாப நிலை உள்ளது.

இதுபோன்று எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, கொண்டுநல்லான்பட்டி, உச்சிநத்தம் போன்ற பகுதியில் பயிரிடப்பட்ட மிளகாய் பயிர்கள் மழை வெள்ளத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டாம் முறையாக பயிரிடப்பட்ட பயிர்கள் மழை மற்றும் போதிய தண்ணீரின்றி கருகியது.

இதனால் குறிப்பிட்ட பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலாடி பகுதி விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரியாக பெய்தாலும் கூட கடலாடி சுற்றுவட்டார பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் பெருகவில்லை. வரத்து கால்வாய் வசதியின்றி வைகை தண்ணீரும் வரவில்லை. இதனால் கதிர்விட்ட நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் வெயிலுக்கு கருகி கிடக்கிறது. கால்நடைகளுக்கு வைக்கோல் கூட அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய் துறையினர் நேரடி ஆய்வு செய்து அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.326.15 பணம் கட்டி காப்பீடு செய்துள்ளோம். எனவே பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தாண்டு மாவட்டத்தில் பரவலான பகுதியில் சராசரியை விட நல்ல மழை பெய்தது. கடலாடி பகுதியில் மட்டும் சராசரியாக மழை பெய்யவில்லை. இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கதிர்விட்ட தருவாயில் இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வட்டார அலுவலர்கள் ஏற்கனவே தகவல் அளித்துள்ளனர். அதன் பேரிலும், விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் வேளாண்மைத் துறை, வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு செய்து இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Kataladi ,Sayalgudi , Sayalgudi: Relief and Insurance Scheme for Paddy and Chilli Crops Affected by Inadequate Water in Kataladi, Sayalgudi Area
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்