×

பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலை சீரமைப்பு பணியால் 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற கனரக வாகனங்கள்

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலை சீரமைப்பு பணியால், நேற்று அவ்வழியாக வந்த கனரக வாகனங்கள் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து பரபரப்பாக காணப்படும். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் அளவிற்கு நெரிசல் மிகுந்த சாலையாகும். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்கூட செல்வதற்கு திக்குமுக்காட வேண்டியிருக்கும்.

இந்நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளித்தது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். சாதாரண நாட்களில் சாலை சீரமைப்பு பணி நடந்தால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாது என கருதி, முழு ஊரடங்கான நேற்று இந்த பணியை மேற்கொண்டனர்.

அதன்படி, நேற்று காலை தொடங்கிய இந்த சாலை சீரமைப்பு பணி, பள்ளிகொண்டா சாவடி ரங்கநாதர் கோயிலில் இருந்து நெடுஞ்சாலையை அடையும் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தது.
வழக்கமாக ஆந்திராவில் இருந்து கடப்பா கற்கள் உள்ளிட்ட லோடுகளை ஏற்றி செல்லும் கனரக லாரிகள், மும்பை, கர்நாடகா, கேரளா செல்ல சித்தூர், குடியாத்தம் வழியாக  பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையை அடையும். இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

இந்நிலையில், நேற்று நடந்த சாலை சீரமைப்பு பணியால் 200க்கும் அதிகமான கனரக வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம், அதாவது வேப்பூர் வரை அணிவகுத்து நின்றது. இதனால், மும்பை, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு குறித்த நேரத்தில், தங்களால் லோடு இறக்க முடியவில்லை என டிரைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இந்த வழியாக வருவதால் பள்ளிகொண்டா பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதற்கு தீர்வாக அவ்வழியாக பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும், பள்ளிகொண்டா- குடியாத்தம் இடையே புறவழிச்சாலை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Schooligonda , Pallikonda: Due to the Pallikonda-Gudiyatham road repair work, heavy vehicles that came through yesterday were able to cross about 5 km. Marching to the distance
× RELATED பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காட்டில்...