×

வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்-விதி மீறி சுற்றியவர்களுக்கு அபராதம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.உலகையும், இந்தியாவையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் வேகம் தமிழகத்திலும் அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி தொடங்கி இன்று காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக வேலூர் நகரில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கிரீன் சர்க்கிள் பகுதி, பாலாற்று பாலங்கள், காட்பாடி- சித்தூர் சாலை, காட்பாடி சாலை, ஆற்காடு சாலை, அண்ணா சாலை, பெங்களூரு ரோடு, ஆரணி சாலை என அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டிருந்தன. வேலூர் கோட்டைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல், மாவட்டத்தில் குடியாத்தம் நகரில் பழைய, புதிய பஸ் நிலைய பகுதி, நேதாஜி சவுக், சித்தூர் சாலை, வி.கோட்டா சாலை, உள்ளி சாலை பகுதிகளில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேபோல் பேரணாம்பட்டு நகரில் குடியாத்தம் சாலை, வி.கோட்டா சாலை, ஆம்பூர் சாலை, பஸ் நிலைய பகுதிகள் வெறிச்சோடின. இதுதவிர அணைக்கட்டு, ஒடுகத்தூர், கணியம்பாடி, பள்ளிகொண்டா, திருவலம் என அனைத்து பகுதிகளிலும் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்ததுடன் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கை கண்காணிக்க மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அத்தியாவசிய பணிகள், அவசர காரியங்களுக்காக வாகனங்களில் செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அப்படியே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் வெளிமாநிலங்களில்  இருந்து தமிழகத்துக்கு பஸ், ரயில்களில் வருபவர்களின் நலனுக்காக ஆட்டோக்கள், டாக்சிகள் அனுமதிக்கப்பட்டன.

ஊரடங்கை மீறியவருக்கு அபராதம்

சத்துவாச்சாரியில் ஊரடங்கை மீறும் வகையில் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் ₹1,200 அபராதம் விதித்தனர். ஆனாலும், வேலூர் நகரில் ெகாணவட்டம், சேண்பாக்கம், தொரப்பாடி, சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை பிடிசி ரோடு, பழைய காட்பாடி ஆகிய இடங்களிலும், குடியாத்தம் சித்தூர் கேட் உட்பட ஒரு சில இடங்களிலும், பேரணாம்பட்டில் பல இடங்களிலும் இறைச்சி விற்பனை கனஜோராக நடந்தது. குறிப்பாக கடைகள் மூடப்பட்டிருந்தாலும் அருகில் மறைவான இடங்களில் இறைச்சியை வைத்து விற்பனை நடந்தது.

Tags : Vellore district , Vellore: Roads in Vellore district were deserted due to complete curfew.
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்