ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா?: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவல் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் முறையாக அமைக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த மௌரியா மற்றும் சவரணன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இந்த வழக்குகளை தொடர்ந்திருந்தார்கள். வழக்கில், காவல்துறை புகார் ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்று இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து தீர்ப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த 2 வழக்குகளிலும் மீண்டும் விளக்கங்கள் கூறுவதற்காக தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்தது. அதன்படி பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசலு அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதாவது, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அச்சமயம் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, லாக் - அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிக்க ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் கடந்த வாரம் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசமும் கேட்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க விதிகளில் திருத்தும் செய்யப்பட்டதா என விளக்கம் தர ஆணையிட்டு வழக்கை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள். அவ்வாறு, விதிகள் திருத்தப்பட்டிருந்தால் அது தொடர்பான விவரங்களையும் நீதிமன்ற உத்தரவுகளையும் தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: