நம் பெண் குழந்தைகளை நாம் பேணி பாதுகாப்போம் : ஈபிஎஸ் , தமிழிசை தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்து!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவில் பெண்களுக்கான சமத்துவமின்மை, பெண் கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் போன்ற விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நாடெங்கிலும் இருக்கும் பெண் குழந்தைகளின் கல்வி,உடல்நலம்,சமஉரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதை மையமாக கொண்டுள்ள தேசிய பெண் குழந்தைகள் நாளில், அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்து,இந்த தேசம் செவிமடுக்கட்டும், நம் பெண் குழந்தைகளை நாம் பேணி பாதுகாப்போம் என உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை  இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம். பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம். புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.  அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், தேசத்தின் வளர்ச்சியிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் இன்றியமையாத சக்தியாக விளங்குபவர்கள் பெண் குழந்தைகள்! சாதனையாளர்களாகவும், சமுதாயத்தின் மாபெரும் சக்தியாகவும் திகழும் பெண் குழந்தைகளை போற்றி, இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Related Stories: