×

நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 55 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்

சித்தூர் : ஆந்திர மாநிலம் நெல்லூரில் செம்மரம் வெட்டி லாரியில் கடத்த முயன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் உட்பட 58 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நெல்லூர் மாவட்டம் சின்னக்கூறு மண்டலம் புத்தானம் அருகே சென்னை - நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வந்த லாரி மற்றும் காரை நிறுத்த முயன்ற போது, கடத்தல்காரர்கள் போலீசார் மீது லாரியை ஏற்றி தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. சுதாரித்த போலீசார் லாரியை சுற்றி வளைத்த போது, லாரியில் இருந்த கூலி தொழிலாளர்கள் போலீசார் மீது கோடாரிகளை வீசியதாக கூறப்படுகிறது.

இறுதியாக போலீசார் அந்த கடத்தல் வாகனங்களை மடக்கி 55 கூலி தொழிலாளர்கள் மற்றும் 3 கடத்தல்காரர்களை கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த 36 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் 24 கோடாரிகள், 31 செல்போன்கள், ரூ.75,250 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த பெருமாள் வேலுமலை என்பவரது உத்தரவின் பேரில் இவர்கள் கடத்தலில் ஈடுபட்டதும் இவை அனைத்தும் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து சீனா, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : AP Police ,Tamil Nellore ,Puducherry ,Nellore , செம்மரம்,நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை,கூலி தொழிலாளர்கள்
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்