ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா: தீபக் சாஹர் போராட்டம் வீண்

கேப் டவுன்: இந்திய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 4 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. மலான் 1, கேப்டன் தெம்பா பவுமா 8, மார்க்ரம் 15 ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா 70 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டி காக் - வாண்டெர் டஸன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்தனர்.

அதிரடியாக விளையாடி சதம் அடித்த டி காக் 124 ரன் (130 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி  பும்ரா வேகத்தில் தவான் வசம் பிடிபட்டார். வாண்டெர் டஸன் 52, மில்லர் 39, பிரிடோரியஸ் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். தென் ஆப்ரிக்கா 49.5 ஓவரில் 287 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் பிரசித் 3, தீபக் சாஹர், பும்ரா தலா 2, சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இந்தியா 49.2 ஓவரில் 283 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 4 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3வது தோல்வியை சந்தித்தது.

தவான் 61 ரன், கோஹ்லி 65 ரன், ஷ்ரேயாஸ் 26, சூரியகுமார் 39 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் அதிரடியாக விளையாடி 54 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். பும்ரா 12, சாஹல் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பிரசித் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் என்ஜிடி, பெலுக்வாயோ தலா 3, பிரிடோரியஸ் 2, மகாலா, மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Related Stories: