×

என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: என்.எல்.சி. நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள், கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளன. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் கடந்த 17ம் தேதி என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளார். என்.எல்.சி. நிறுவனம், பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களிடமோ, விவசாயிகளிடமோ, அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடமோ கருத்துகளைக் கேட்காமல் ஒருதலைபட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள், ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய நல்ல விளைச்சல் நிலங்களாகும். ஒரு ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்திற்கு மேல் ஆகும். அதேபோல், இன்று ஒரு சென்ட் வீட்டு மனை நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உள்ளது. அதற்கேற்றவாறு நில இழப்பீட்டு மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்எல்சி நிறுவனம் நிரந்த வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

இன்றைய தேதியில் சுமார் 11,510 நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய 44 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் எவரும் இன்று பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது, என்.எல்.சிக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,500 நபர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, தினக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது புவனகிரி தொகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் உள்ளது. எனவே, இச்சட்டத்தைக் கருத்திற்கொண்டு, நிர்வாகம், நில உரிமையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இப்பகுதி மக்களின் நில இழப்பீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமூகமான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : NLC ,Edappadi , To ensure employment for those who donated land to the NLC mine: Edappadi demand
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...