நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் பொதுப்பணி, நீர்வளத்துறைக்கு புதிய பொறியாளர் பணியிடம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை நிர்வாக வசதிக்காக நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால், பொதுப்பணி்த்துறையில் 1,077ம், நீர்வளத்துறையில் 2287 பொறியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணை: நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இரண்டு தனித் துறைகளாக செயல்படுவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறையில் முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) மற்றும் தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்), சென்னை மண்டலம், பொதுப்பணித் துறை, சேப்பாக்கம் அலுவலகத்தில் தனிப்பொதுப் பிரிவு அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையின் அனைத்து விவகாரங்களையும் சென்னையில் உள்ள முதன்மை தலைமை பொறியாளர் கவனிப்பார். இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறைக்கான தலைமை பொறியாளர் பணியிடங்கள் 19ல் இருந்து 20 ஆக மாற்றியமைக்கப்படுகிறது. அதே போன்று கண்காணிப்புப் பொறியாளர் பதவியில், விகித மாற்றத்தின்படி அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் பலம் என்பது பொதுப்பணித் துறையைப் பொறுத்தமட்டில், புதிதாக ஒன்றைச் சேர்ப்பதன் மூலம் 16க்கு பதிலாக 17 ஆக மாற்றியமைக்கப்படும்.

அதன்படி பொதுப்பணித்துறையில் 6 தலைமை பொறியாளர் பணியிடங்களும் நீர்வளத்துறையில் 14 தலைமை பொறியாளர் பணியிடங்கள் என மொத்தம் 20ம், பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளர் 17 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 38 பணியிடங்கள் என மொத்தம் 55ம், பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர் 72 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 154 பணியிடங்கள் என மொத்தம் 226ம், பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் 252 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 537 பணியிடங்கள் என மொத்தம் 789 பணியிடங்களும், பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் 730 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 1551 பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது.

பொதுப்பணித்துறையில் இனி முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) மற்றும் தலைமை பொறியாளர் (கட்டிடம்), தலைமை பொறியாளர் (பொது) என மாற்றப்படும். நிர்வாகப் பணியிடங்கள் பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறை ஆகிய துறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும். தரக் கட்டுப்பாடு பிரிவுகள் விழுப்புரம், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை முறையே சென்னை, மதுரை மற்றும் கோவைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: