தடுப்பூசி போடாத, வயதான, இணைநோய் உள்ளவர்கள் தான் 95% இறப்பு கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126வது பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மூன்றாவது அலை தொடங்கியதிலிருந்தே முதல்வர் சிறப்பான நடவடிக்கையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இரண்டு வார காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கை பொதுமக்கள் நேர்த்தியாக கடைப்பிடிக்கிறார்கள் என்பது வெறிச்சோடிய சாலைகளும், ஸ்தம்பித்து போன நிலையும் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது அலையில் இருந்து தப்பிப்பதற்காக முதல்வர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஊரடங்கு வெற்றி ஓர் சான்றாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தொற்றின் அளவு என்பது குறைந்து கொண்டிருக்கிறது. சென்னையில் 9 ஆயிரம் அளவுக்கு உயர்ந்த தொற்றின் அளவு இன்றைக்கு 6 ஆயிரம் அளவுக்கு குறைந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பெருநகரங்களில் தொற்றின் அளவு குறைந்து வருவது பெரும் ஆறுதலாக இருக்கிறது. தொற்றின் அளவு குறைந்து வரும் போது ஊரடங்கு என்பது தேவை இல்லாததாகக் கருதப்படும். தொற்றின் அளவு 30 ஆயிரமாக இருந்த போது இறப்பு சதவிகிதம் அடிப்படையில் குறைந்து உள்ளது. தடுப்பூசி முதல் தவணைக் கூட போட்டுக் கொள்ளதவர்கள், வயது மூப்பு காரணமாக இணைநோய் உள்ளவர்கள் தான் 95 சதவிகிதம் இறப்பு என்பது இருந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: