×

தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விட முடிவு: இலங்கை அரசு நடவடிக்கை..!

கொழும்பு: தமிழ்நாடு மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களை தாக்குவதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, இலங்கை கடற்படையினர் 105 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக மீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சமும், நாட்டு படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் பிப்ரவரி 7-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், பிப்ரவரி 8-ம் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளையும், பிப்ரவரி 9-ம் தேதி கிராஞ்சியில் 24 படகுகளையும், பிப்ரவரி 10-ம் தேதி தலைமன்னாரில் 9 படகுகளையும், பிப்ரவரி 11-ம் தேதி கற்பிட்டியில் 2 படகுகளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில், இலங்கை அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Sri Lanka Navy ,Tamil Nadu ,Sri Lankan , Sri Lankan navy seizes 105 boats seized from Tamil Nadu fishermen by auction: Sri Lankan government action ..!
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்