சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் போலீசின் கணவர், மகளின் மருத்துவ செலவிற்கு 3.39 லட்சம்: எஸ்பி வருண்குமாருக்கு காவலர்கள் பாராட்டு

திருவள்ளூர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ரேணுகா. இவரது கணவர் ராஜசேகரன். இவர்களுக்கு ஹாஷிதா(7) என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில், கடந்த 14ம் தேதி ராஜசேகரன், மகள் ஹாஷிதாவுடன் மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகம் அருகே பைக்கில் சென்றார். அப்போது, அங்கிருந்த ேவகத்தடையில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு ஹாஷிதாவை சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜசேகரனை மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஹாஷிதாவின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. அவளது சிகிச்சைக்கு ₹10 லட்சத்திற்கு மேல் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தொகையை செலுத்தும் அளவிற்கு பெண் காவலரின் குடும்ப சூழ்நிலை இல்லை. இதுபற்றிய செய்தி பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பரவியது. இதை கண்ட திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார், பெண் காவலரின் கணவர் மற்றும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவும் வகையில் அதுபற்றிய செய்தியை திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் அனைவருக்கும் தெரியப்படுத்தி விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பினை அளிக்கலாம் என அவர் முதன்முதலாக ₹10 ஆயிரம் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள விருப்பம் உள்ள போலீசார் மருத்துவ செலவிற்கு உதவும் விதமாக ₹3 லட்சத்து 39 ஆயிரத்து 300ஐ வழங்கினர். அதற்கான காசோலையை நேற்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக பெண் காவலர் ரேணுகாவிடம் நேரில் வழங்கப்பட்டது.

Related Stories: