×

பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கவில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் பதில் மனு

சென்னை: கோவை  அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின்  பீடத்தை அகலப்படுத்தி, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள்  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த  லோகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை  அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த  எடுத்த நடவடிக்கைகள் குறித்து  பதில்மனு தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக தலைமைச் செயலாளர்  இறையன்பு தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்  அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை பல்வேறு  துறைகளின் ஆய்வுக்கு உட்படுத்தி, முதல்வரின் உத்தரவைப் பெற்று வருவாய் துறை  இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் அடிப்படையில், வருவாய் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட  ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு நிலங்கள்,  நீர்நிலைகள், சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை  ஆக்கிரமிக்காமல் சிலைகள் அமைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை  அளிக்குமாறு வருவாய் துறை அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். சிலைகள்  அமைக்கப்படுவதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என்பது குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை பெற வேண்டும். பட்டா நிலங்களில்  அமைக்கப்படும் சிலைகளை பராமரிப்பதற்கான செலவை, சிலை அமைப்பவர்கள்  சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும் என்று   அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்னை, உள்ளாட்சி  அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் மற்றும் உச்ச நீதிமன்ற  உத்தரவை கருத்தில் கொண்டே  சிலைகள் அமைக்க அனுமதியளிக்கப்படுகிறது. உச்ச  நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க  எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Tags : Chief Secretary ,Chennai High Court , Permission not to place statues in public places: Chief Secretary's reply petition in the Chennai High Court
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி