×

ஆதம்பாக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 1.50க்கு இட்லி தந்து பசியாற்றும் மூதாட்டி

* எந்த லாபமும் இல்லாமல் மனதிருப்தி அடைகிறார்
* 70 வயதிலும் டோர் டெலிவரி செய்து அசத்தல்

சென்னை: ஆதம்பாக்கத்தில் 20 ஆண்டுகளாக ₹1.50க்கு இட்லி விற்பனை செய்து ஏழை எளியோரின் பசியாற்றுகிறார் ஒரு மூதாட்டி. தனது மன திருப்திக்காகவே குறைந்த விலையில் இட்லி விற்பனை செய்வதாக அவர் கூறுகிறார்.ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் நிகோலஸ் (72). இவரது மனைவி விரோனிகா (70). இவர், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இன்றைய காலகட்டத்தில் ₹10க்கு இட்லி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மூதாட்டி விரோனிகா ₹1.50க்கு மட்டுமே இட்லி விற்று வருகிறார்.அவரை சந்திக்க சென்றபோது அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருந்தது. விரோனிகா, டோர் டெலிவரிக்கு சென்றிருப்பதாக பக்கத்து வீட்டில் உள்ள மற்றொரு மூதாட்டி தெரிவித்தார். சிறிதுநேரத்தில் அங்கு வந்த அந்த விரோனிகா, உங்களுக்கு என்ன வேண்டும் இட்லியா 10 ரூபாய்க்கு 7 இட்லி சாப்பிட்டுட்டு போங்க என்றார்.

பார்சல்தான் வேண்டும் என்றபோது, பார்சல் எல்லாம் தர முடியாது என கறாராக கூறிவிட்டார். வேணும்னா, சாப்பிட்டுட்டு போங்க என்றார். டோர் டெலிவரி எல்லாம் பண்றீங்க. ஏன் பார்சல் தரக் கூடாதா என்றால் அவர்களெல்லாம் வேலை வெட்டிக்கு போகிறவர்கள். காலையில் வீட்டிற்கு வந்து பாத்திரங்களை வைத்துவிட்டு போவாங்க.. அவங்களுக்கு மட்டும் பல வருடமா வீடு தேடிசென்று கொடுத்து வருகிறேன், என்றார்.ஒரு நாளைக்கு எவ்வளவு இட்லி விற்பீர்கள் என்று கேட்டால், 300 ரூபாய்க்கு இட்லி விற்பேன். இதில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்றால் ஒன்றுமே கிடைக்காது. என இரு கைகளையும் விரித்து காட்டியவர். அந்த 300 ரூபாய்க்கும் அடுத்த நாளுக்கு தேவையான அரிசி, பருப்பு, தேங்காய் போன்றவற்றை வாங்க வேண்டும், என்றார். லாபம் இல்லாமல் ஏன் வியாபாரம் செய்றீங்க... என கேட்டபோது, எனது கணவர் பேங்க் ஏடிஎம் ஒன்றில் வாட்ச்மேன் வேலை செய்கிறார். அதை வைத்து குடும்பத்தை ஓட்டுகிறேன், என்றார்.

இதுகுறித்து விரோனிகாவின் கணவர் நிக்கோலசிடம் கேட்டபோது, ‘முதலில் 50 காசு, 1 ரூபாய் என்று விற்ற இட்லியை தற்போது ஒன்றரை ரூபாய்க்கு சாம்பார் சட்னியுடன் மனைவி விற்கிறார். இந்த இட்லி கடையை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விரோனிகா இட்லி வியாபாரம் செய்வதை நானும் திருமணமாகி சென்ற எனது 3 மகள்களும் கண்டுகொள்வதில்லை. அவளது மன திருப்திக்காக இதை செய்வதாக விட்டுட்டோம். அதிகாலை 3 மணியில் இருந்து பரபரப்பாக வியாபாரத்தில் இறங்குகிறார்,’ என்றார்.மேலும் அவர் கூறுகையில், படாளத்தில் உள்ள ஒரு கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்தேன். ஓய்வுக்கு பின் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் வாட்ச்மேனாக வேலை பார்த்தேன். அங்கேயும் கொரோனாவை காரணம்காட்டி சம்பளத்தை நிறுத்திவிட்டனர். ஏதோ வங்கியில் பணிபுரிபவர்கள், இடத்தில் உரிமையாளர் ஆகியோர் இரக்கப்பட்டு கொடுக்கும் பணத்தில் காலத்தை ஓட்டுகிறோம். பலமுறை முயற்சித்தும் எங்களுக்கு முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை. சொற்ப பணத்தில் நாங்களும் சாப்பிட்டு, 3 ஆயிரம் வீட்டு வாடகையும் கொடுத்து காலத்தை ஓட்டுவது கடினமாக உள்ளது,’ என்றார்.

அடுப்பில் உள்ள குண்டாவில் இருந்து சுடசுட எடுக்கும் இட்லியை, வைப்பதற்கு கூட சரியான பாத்திரம் இல்லை என்று கூறியதால் ஆலந்தூர் முன்னாள் திமுக கவுன்சிலர் முரளிகிருஷ்ணன் மூலம் வழங்கப்பட்ட ஹாட்பேக்கை அந்த பகுதியில் உள்ளவர்கள் விரோனிகாவிடம் கொடுத்தனர். அதை அவர் புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டார்.சாலையில் நடந்து செல்லும்போது, அங்குள்ளவர்கள், ‘ஒன்னா ரூபாய் இட்லி  பாட்டி போகுது,’ என்று கூறும்போது எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார்  விரோனிகா.





Tags : Adambakkam , The hungry old lady who has been giving Italian for 1.50 for the last 20 years in Adambakkam
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு