×

கொள்ளிடத்தில் கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்தது: கும்பகோணம் அருகே பரபரப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி 250 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் மேல் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு ரூ.100 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பாலத்தில் 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. நேற்றுமுன்தினம் 4 மற்றும் 5வது தூண் இணைக்கும் வகையில் சிமென்ட் காங்கிரீட் போடும் பணி நடந்தது. தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் 4மற்றும் 5வது தூணுக்கு இடையே பாலத்தின் ஒரு பகுதி 250 அடி நீளத்துக்கு திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனியார் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் இடிந்து விழுந்த பகுதியை அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெறுவதால் அப்பகுதிக்கு யாரும் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணைக்கரை தென்கரையிலிருந்து கொள்ளிடத்தில் புதிய பாலம் கட்டும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இன்று (நேற்று) அதிகாலை 2.30 மணி அளவில் ஊழியர்கள் 15 பேர் பணியில் இருந்தனர். அப்போது கிரேன் மூலம் 12 மீட்டர் அகலம், 50 மீட்டர் நீளம் கொண்ட காங்கிரீட் சிமென்ட் பாலத்தை தூக்கி பொருத்தும் போது எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கிரேன் கம்பி அறுந்து விழுந்ததாகவும், இதனால் கொள்ளிடத்தில் காங்கிரீட் சிமென்ட் பாலம் இடிந்து விழுந்ததாகவும் தனியார் நிறுவனத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.




Tags : Kollidam ,Kumbakonam , Will be built on the site Bridge collapses: commotion near Kumbakonam
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்