×

காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார்? பஞ்சாப்பில் பஞ்சாயத்து: முந்துகிறார் சன்னி விடுவாரா சித்து?

பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டபேரவை  தேர்தல் நடக்க உள்ளது. இங்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனி அதிகார மையங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அதிகார போட்டி, தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என  கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும் என்றால், காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் பெயரை  அறிவிக்க வேண்டும் என கட்சி தலைமைக்கு மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்மாநிலத்தில் காங்கிரசுக்கு பலத்த போட்டியை அளித்து கொண்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பகவந்த் மான் என்பவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அகாலி தளம் கட்சி  முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்காவிட்டாலும், அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்தான் அந்த பதவிக்கு வருவார். ஏனென்றால், அவருடைய  தலைமையில்தான் அகாலி தளம் தேர்தலை சந்திக்கிறது. முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பற்றி காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், ‘நவ்ஜோத் சித்து மாநில காங்கிரஸ் கட்சியின் சர்தார்( தலைவர்).

சரண்ஜித் சிங் சன்னி அரசின் சர்தார் (முதல்வர்). இவர்களுடன் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்போம்,’ என  தெரிவித்துள்ளார். கடந்த 2012, 2017ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலில் யார் பெயரையும் அறிவிக்காமல் மவுனம் சாதிக்கிறது. இது, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மாநில அமைச்சர் பிரம் மொகிந்திரா தெரிவித்துள்ளார்.பாஜ.வில் எம்பியாக இருந்த சித்து, அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர். முதல்வர் பதவியை குறிவைத்தே இவருடைய ஒவ்வொரு செயலும் அமைந்துள்ளது. சன்னிக்கு முன்பாக முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கை, தனது ஆக்ரோஷ தாக்குதல் அரசியலின் மூலம் கட்சியை விட்டே விலக வைத்தவர். தற்போது, அமரீந்தர் புதிய கட்சியை தொடங்கி, பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அமரீந்தர் இருக்கிறார்.

   இந்நிலையில், சித்துவை விட சன்னிக்கே முதல்வராக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரான நிகில் ஆல்வா,  பஞ்சாப்பின் காங்கிரஸ் முதல்வர் முகம் யார் என்பது குறித்து டிவிட்டரில் ஒரு கருத்து கணிப்பை நடத்தினார். அதில், 68.7 சதவீதம் பேர் சரண்ஜித் சன்னிக்கும், 11.5 சதவீதம் பேர் சித்துவுக்கும், 10.4 சதவீதம் பேர் சுனில் ஜாக்கருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், அதை சித்து எந்தளவுக்கு ஏற்பார் என்பது விரைவில் தெரியும்.




Tags : Congress ,Punjab ,Sidhu , Who is the Chief Ministerial candidate of the Congress? Panchayat in Punjab: Will Sidhu leave Sunny ahead?
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்