×

முதல்வர் வேட்பாளரா? எரிச்சலில் சொன்னேன்: பிரியங்கா காந்தி விளக்கம்

உபி சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.  தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உபியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.   உபி இளைஞர்களுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரியங்கா நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது, ‘காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார்? என அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘உபி தேர்தல் பிரசாரத்தில் என்னை தவிர வேறு எந்த காங்கிரஸ் தலைவர்களின் முகத்தையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? உபி.யில் என் முகத்தை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம்,’ என கூறினார்.  இதனால், உபி.யில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்பதை  பிரியங்கா சூசகமாக கூறுவதாக கருதப்பட்டு, பெரியளவில் செய்திகள் வெளியாகின.

ஆனால், பிரியங்கா காந்தி நேற்று இதை மறுத்தார். அவர் கூறுகையில், ‘‘உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரசின் முகம் என்று நான் கூறவில்லை. நீங்கள் (நிருபர்கள்) அனைவரும் ஒரே கேள்வியை திருப்பி திருப்பி கேட்டதால் எரிச்சலில் எனது முகத்தை எங்கும் காணலாம் என குறிப்பிட்டேன். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி முடிவு செய்யும்,’’ என்றார்.

வேட்பாளரை மாற்றினால் கட்சிக்கு திரும்பி வருவேன்: பாஜ.வுக்கு உத்பால் நிபந்தனை
கோவா சட்டபேரவைக்கு அடுத்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 40 இடங்களில் 34 இடங்களுக்கு பாஜ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கருக்கு  டிக்கெட் வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் அட்னாசியோ மான்செராட்டே என்பவரை  பனாஜி தொகுதி வேட்பாளராக பாஜ நிறுத்தியுள்ளது. இதனால், ஏற்பட்ட அதிருப்தியில்  கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்த உத்பால், பனாஜியில் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இது, பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய முடிவால் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், உத்பால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கட்சியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்தது எனக்கு மிகவும் சிரமமாக  இருந்தது. இது மிகவும் கடினமான முடிவு. இது போன்ற ஒரு நிலை உருவாகாமல் தவிர்ப்பதற்கு கடும் முயற்சி செய்தேன். ஆனால், சில நேரங்களில் நாம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு என்னுடைய தந்தையை கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் நடந்தன. அதுபோன்ற ஒரு நிலைதான் தற்போது எனக்கும் நிகழ்ந்துள்ளது. ஒருவேளை, பனாஜியில் நல்ல வேட்பாளரை பாஜ நிறுத்தினால் போட்டியில் இருந்து விலகி, கட்சிக்கு திரும்பி வருவேன்,’’ என்றார்.

ஆட்சிக்கு வந்தால் 22 லட்சம் பேருக்கு ஐடி.யில் வேலை
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று அளித்த பேட்டியின்போது, மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் சட்டப்பேரவை தொகுதியில் அவர் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அகிலேஷ் கூறுகையில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தகவல் தொழில்நுட்ப துறையில் 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சமாஜ்வாடி ஆட்சியின்போது லக்னோவில் எச்சிஎல் சார்பில் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க  அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணியை கிடப்பில்  போடாமல் செயல்படுத்தி இருந்தால், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும்,’’ என்றார்.

முன்னாள் முதல்வர் பாஜ.வுக்கு டாடா
கோவாவில் பாஜவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் லட்சுமிகாந்த் பார்சேக்கர். முன்னாள் முதல்வரான இவருக்கும், இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், கட்சியில் இருந்து நேற்று  விலகினார். மேலும், சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். இதேபோல், துணை முதல்வர் சந்திரகாந்தின் மனைவி சாவித்ரிக்கு டிக்கெட் வழங்காததால் அவரும் சுயேச்சையாக களத்தில் இறங்கி உள்ளார்.

ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சமாஜ்வாடிக்கு ஓட்டம்
ரேபரேலி கன்டோன்மென்ட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுப்ரியா ஆரோன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில்,  சுப்ரியா நேற்று தனது கணவரும் முன்னாள் எம்பி.யுமான பிரவின் சிங் ஆரோனுடன் சமாஜ்வாடியில் அவர் இணைந்தார். இதைத் தொடர்ந்து, இதே தொகுதியின் சமாஜ்வாடி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். அங்கு சமாஜ்வாடி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ராஜேஷ் அகர்வால் மாற்றப்பட்டு உள்ளார்.

Tags : Chief Ministerial ,Priyanka Gandhi , Chief Ministerial candidate? I said irritably: Priyanka Gandhi interpretation
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!