×

5ஜி செல்போன் சேவை அமலுக்கு வந்தால் இந்தியாவில் விமான விபத்துகள் ஏற்படுமா?: டிராய் தலைவர் புதிய விளக்கம்

புதுடெல்லி: ‘இந்தியாவில் 5ஜி செல்போன்  சேவையால் விமானங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது,’ என்று ‘இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்’ (டிராய்) தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் 5ஜி செல்போன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், விமானங்கள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருந்ததால், இந்தியாவின் ஏர் இந்தியா உட்பட பல்வேறு நாட்டு விமான நிறுவனங்கள், அன்றைய தினம் அமெரிக்காவுக்கான விமானங்களை ரத்து செய்தன. 5ஜி செல்போன் இயங்குவதற்கான அலைக்கற்றை வரிசை, விமானங்களின் கருவிகளின் இயக்கத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  பின்னர், ஆபத்து எதுவும் ஏற்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளித்த பிறகே, விமான சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் 5ஜி செல்போன் சேவையால் விமானங்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்)  தலைவர் வகேலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் 5ஜி செல்போன் சேவைக்கான அலைக்கற்றைக்கும், விமானங்களை இயக்குவதற்கான அலைக்கற்றைக்குமான  இடைவெளி மிகவும் குறைவாக இருக்கிறது. இந்நாட்டின் 5ஜி செல்போன் சேவை அலைக்கற்றை, 3700 முதல் 3980 மெகாஹெட்சில் செயல்படுகிறது. அதே நேரம், விமானங்களில் உள்ள  அலைக்கற்றை வரிசை 4200 முதல் 4400 மெகாஹெட்சில் செயல்படுகிறது.  ஆகவே, அமெரிக்காவில் இவை இரண்டுக்குமான இடைவெளி 220 மெகாஹெட்ஸ் மட்டுமே உள்ளது.

ஆனால், இந்தியாவின் 5ஜி செல்போன் அலைக்கற்றை வரிசை, 3300 - 3670 மெகாஹெட்சுக்கு இடையே செயல்படும். எனவே, விமானத்தின் அலைக்கற்றைக்கும் இந்தியாவின் 5ஜி அலைக்கற்றைக்கும் இடையே 530 மெகாஹெட்ஸ் இடைவெளி இருக்கிறது. இதனால், இரண்டுக்கும் இடையே இணைப்புகள் ஏற்பட்டு, விமானங்களில் குளறுபடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. இருப்பினும், இது பற்றி மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன,’’ என்றார்.

இந்தியாவில் அமலாக இன்னும் 2 ஆண்டுகள்
உலகளவில் அமெரிக்கா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் 5ஜி செல்போன் சேவை அமலுக்கு வந்துள்ளன. ஆனால், இந்தியாவில் இது அமலுக்கு வருவதற்கு மேலும் 1-2 ஆண்டுகள் வரை ஆகக்கூடும். ஏனெனில், 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம், இந்தாண்டு இறுதியில்தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : India ,Troy , If 5G cell phone service comes into effect Will there be plane crashes in India ?: Troy leader New interpretation
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...