டெல்லியில் பிரபல ரவுடியாக வலம் வர நினைத்து கொலை: புஷ்பா படம் கூட ஒரு இன்ஸ்பிரேசன் என கூறிய சிறுவர்கள்

டெல்லி: சமீபத்தில் வெளியான புஷ்பா படம் ஏற்படுத்திய தாக்கத்தால் சிறுவர்கள் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜஹாங்கீர்புரியில் 24 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் பயங்கர கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிக்சையளித்துக் கொண்டிருந்த போதே பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினரிடம் கொலை முயற்சி சம்பவம் நடந்த  இடத்தின் சிசிடிவி காட்சிகள் சிக்கி அவர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அந்த காட்சியில் 3 சிறுவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞரிடம் வேண்டுமென்றே வம்பிழுத்துள்ளனர்.

பின்னர் இளைஞரை சிறுவர்களில் ஒருவன் மடக்கி பிடிக்கிறான்; மற்றொரு சிறுவன் அந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்துகிறான். 3-வதாக உள்ள சிறுவன் இதையெல்லாம் செல்போனில் படம் பிடிக்கிறான். கத்தியால் குத்தியதில் இளைஞர் வலிதாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட்டதால் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவரை அப்படியே போட்டுவிட்டு சிறுவர்கள் தப்பியோடி விடுகின்றனர். இதன்பிறகு போலீசாரிடம் மாட்டிக்கொண்ட அச்சிறுவர்கள் 3 பேரும் எதற்காக கொலை செய்தார்கள் என்பதை தெரிவித்தனர்.

அதில் தாங்கள் கேங்ஸ்டர் படங்களை பார்த்து பார்த்து அவற்றில் வரும் நாயகர்களை போல தாங்களும் ரவுடிகளாக விரும்பியதால் ஒருவரை கொலை செய்யும் காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினால் அதன் மூலம் பிரபலமாகலாம் என எண்ணியதாக தெரிவித்தனர். மேலும் பட்டணம் கேங் என்று பெயரிடப்பட்டிருக்கும் அவர்களது கூட்டணிக்கு சமீபத்தில் வெளியான புஷ்பா படம் கூட ஒரு இன்ஸ்பிரேசன் தான் என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.         

Related Stories: