×

போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கிடைக்குமா?: கைது செய்ய போலீசார் முடிவு

திருவனந்தபுரம்: கேரள போலீஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் நடிகர் திலீப்பை உடனே கைது செய்ய போலீசார் தீர்மானித்து உள்ளனர்.
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்புக்கு எதிராக போலீசார் தங்களது பிடியை இறுக்கி வருகின்றனர். வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாருக்கு எதிராக நடிகர் திலீப் தலைமையில் 6 பேர் சதித்திட்டம் தீட்டியதாக டைரக்டர் பாலச்சந்திர குமார் கூறிய உடனேயே குற்றப்பிரிவு போலீசார் விரைந்து செயல்பட்டு வழக்குப்பதிவு செய்தனர். முதலில் திலீப்புக்கு எதிராக சாதாரண பிரிவுகளில் தான் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசாரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது கடுமையான பிரிவில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். இதற்கிடையே முன்ஜாமீன் கோரி திலீப் உள்பட 6 பேரும் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது திலீப்புக்கு முன் ஜாமீன் கொடுக்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இது மிக முக்கியமான வழக்கு என்பதாலும், விரிவாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும் இன்றைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கோபிநாத் கூறினார். இன்று சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் தான் விசாரணை நடந்து வருகிறது.

ஆனாலும் மிக முக்கியமான வழக்கு என்பதால் நேரடியாகவே நீதிமன்றத்திற்கு வந்து விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கோபிநாத் தெரிவித்து உள்ளார். இதனால் மனு மீதான தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் நடிகர் திலீப்பை உடனே கைது செய்ய போலீசார் தீர்மானித்து உள்ளனர். இதற்கிடையே நடிகையை பலாத்காரம் செய்வதற்கு முன்பு கொச்சி ஆலுவாவில் உள்ள ஒரு ஓட்டலில் சிலர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சுனில்குமாரின் தாய் சோபனா கூறியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மகனை பார்க்க சிறைக்கு சென்றபோது, அவர் ஒரு கடிதம் கொடுத்ததாகவும், அந்தக் கடிதத்தில் இந்த விவரங்கள் இருப்பதாகவும் சோபனா தெரிவித்துள்ளார். இதையடுத்து சுனில்குமாரின் தாய் சோபனாவிடமும், சுனில்குமாரிடமும் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

Tags : Dilip , Police Officer, Kill, Conspiracy, Actor Dilip
× RELATED வேடசந்தூர் அருகே மது விற்றவர் கைது