ஈரோடு அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட 3 பேர் பலி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள நஞ்சப்பகவுண்டன் புதூர் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக அப்பகுதியில் கான்கிரீட் கலவை கலக்கப்பட்டு இயந்திரம் மூலம் லாரியில் கலவை ஏற்றி வடிகால் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மதியம் கான்கிரீட் கலவை ஏற்றிக்கொண்டுபி கலவை இயந்திர லாரி நஞ்சப்பகவுண்டன் புதூர் அருகே சென்று கொண்டிருந்தது, லாரியில் ஓட்டுநர் உட்பட 4 பேர் இருந்த நிலையில் சாலை வளைவில் லாரியை ஓட்டுநர் திருப்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் வந்த சந்தோஷ்குமார் என்ற பணியாளர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று லாரிக்கு அடியில் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

லாரியின் அடியில் 3 பேரின் உடல்களும் சிக்கியதால் பொக்லைன் இயந்திரம் கொண்டு 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரின் உடல்களும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

Related Stories: