2வது போட்டியிலும் இந்தியா படுதோல்வி 3-0 என தொடரை வெல்வோம்: தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா நம்பிக்கை

பார்ல்: தென்ஆப்ரிக்கா-இந்தியா இடையே 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 66 பந்தில் 78 ரன் விளாசிய டிகாக் ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியிலும் வெற்றிபெற்ற அந்த அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. நேற்று தோல்விக்கு பின் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், சொந்த மண்ணில் அவர்கள் நல்ல கிரிக்கெட் ஆடினர். நாங்கள் நடுவில் தவறு செய்தோம். இது எங்களுக்கு ஒரு நல்ல கற்றல். நாங்கள் வளர முடியும் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் சிறப்பாகச் செய்யாத விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறோம். அவர்கள் 280 ரன்னை அவ்வளவு எளிதாகத் துரத்தக்கூடிய பிட்ச் இது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நன்றாக பேட்டிங் செய்தனர். பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை எங்களுக்கு காட்டினர். இன்று பன்ட் சிறப்பாக பேட்டிங் செய்தார். தாகூரும் கீழ்வரிசையில் பேட் செய்து பங்களிப்பை அளித்தார்.

 நீண்ட நாட்களாக நாங்கள் 50 ஓவர் கிரிக்கெட் விளையாடவில்லை. 3வது ஆட்டத்தை எதிர்நோக்கி அதில் வெற்றி பெற முயற்சிப்போம். அதில் சில மாற்றங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், என்றார். தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், தொடரை வெல்ல விரும்பினோம். ஆனால் 2வது போட்டியிலேயே நடந்ததை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. டிகாக் ஏன் எங்களுக்கு இவ்வளவு மதிப்புமிக்க வீரர் என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார். நான் என்னைப் பற்றி மறந்துவிட்டு, அணியில் உள்ள மற்ற தோழர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த முடியும் என்பதைப் பார்க்க முயற்சிக்கிறேன். 2-1 ஐ விட 3-0 மிகவும் நன்றாக இருக்கிறது. 2-1 ஐ விட 3-0 மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன், என்றார்.

Related Stories: