இந்தியாவில் உள்ள பெருநகர மாநகராட்சிகளில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை முன்னிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

* 94.19% பேருக்கு முதல் தவணை போடப்பட்டுள்ளது

சென்னை: சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது நேற்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது. சென்னையில் 94.19% பேருக்கு முதல் தவணை செலுத்திய நிலையில் இந்தியாவில் உள்ள பெருநகர மாநகராட்சியில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் முன்னிலை வகிக்கிறது. சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்தவதில் சிக்கல் ஏற்பட்டால் 104 என்ற எண்ணின் மூலம் புகார் அளித்து தடுப்பூசி செலுத்திகொள்ளலாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும், கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆய்வகத்துடன் பரிசோதனை செய்யும் வகையில் சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய நடமாடும் வாகனத்தையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோட்டி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 3.32 கோடி தடுப்பூசிகள் மெகா தடுப்பூசி முகாம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. அதைப்போன்று 15 முதல் 18 வயதுடைய 25 லட்சம் பேருக்கும், 1.84 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 600 சிறப்பு முகாம் வரும் வியாழக்கிழமை அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை தமிழகத்தில் 9.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 94.19% பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள பெருநகர மாநகராட்சியில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் முன்னிலை வகிக்கிறது. 74.11 % பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580 ஊராட்களில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதே கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. முழுமையான இறப்பு விகிதத்தை குறைக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் தடுப்பூசி போடாமலே போட்டதாக சான்றிதழ் எடுத்து வைத்து கொள்பவர்களை கண்காணிப்பது என்பது சற்று கடினமான ஒன்றாக இருந்தாலும், மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதால் தான் தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது. உங்களை காப்பாற்றுவதற்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை ரூ.1100 இருக்கும் நிலையில், மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசாங்கம் தடுப்பூசி முகாம் நடத்துகிறது. எனவே தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்க வேண்டாம், வாங்க வேண்டாம் என்பதை சிந்தித்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உள் மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது நேற்று 7 ஆயிரமாக சற்று குறைந்துள்ளது. 15-18 வயதுக்குட்பட்டோர் வயது சான்றிதழை காண்பித்து அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்‌சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் 104 என்ற எண்ணின் மூலம் புகார் அளித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: