உத்தரபிரதேச தேர்தலுக்கு பின்னர் பாஜக தவிர எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார்: பிரியங்கா காந்தி

டெல்லி: உத்தரபிரதேச தேர்தலுக்கு பின்னர் பாஜக தவிர எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தேர்தலுக்கு பின்னர் பாஜக தவிர எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. உத்தரபிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். நீங்கள் ஏன் என்னிடம் இதே கேள்வியை அடிக்கடி கேட்கிறீர்கள்? உத்தரபிரதேச தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். கடந்த 2017ல் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அதற்கு முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தோம். பல ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சியும், பாஜகவும் ஆட்சி செய்துவிட்டன.

இருவரும் ஒரே மாதிரியான அரசியலால் ஆதாயமடைந்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சி, வேலையின்மை போன்ற பிரச்னைகள் குறித்து நாங்கள் குரல் எழுப்புகிறோம். மக்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைக்கும். விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்கள்; விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சாதிப் பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன; அவர்களுக்கு வளர்ச்சியில் அக்கறை இல்லை; மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் கட்சியின் நோக்கம். வேலையற்ற இளைஞர்களுக்காக இந்த அரசு என்ன செய்துள்ளது? இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேர்தல் நேரத்தில் அமைதியாக இருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் செயல்படாமல் உள்ளார். ஆளும் பாஜக அரசு கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக அமைதியாக அவர் இருக்க வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசம் மட்டுமின்றி கட்சித் தலைமை கூறும் எந்த மாநிலத்திலும் பிரசாரம் செய்வேன் என்றார்.

Related Stories: