கோட்டைகுளம் அருகே தொட்டியில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டைகுளத்தில் பக்தர்கள் குப்பை கொட்டுவதை தவிர்ப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதன் அருகே தொட்டி கட்டப்பட்டது. இதில் தேங்கியுள்ள குப்பையால் பொதுமக்கள், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரப் பகுதியில் உள்ளது கோட்டைகுளம். இந்த குளம் திப்பு சுல்தான் காலத்தில் மலைக்கோட்டையில் இருந்த வீரர்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்பட்டது. மலைக்கோட்டையின் மேல் பெய்யும் மழைநீர் அனைத்தும் வழிந்து கோட்டை குளத்தில் சேரும். இந்த இடத்தில் குளித்து விட்டு, மலைக்கோட்டை மேலே செல்வதற்கு படிகளும் உள்ளது.

இந்த குளத்து நீரை பொதுமக்களுக்கு குடிநீராக ஒரு காலத்தில் பயன்படுத்தி வந்தனர். கோட்டை குளத்தை சுற்றி நிறைய கோயில்கள் உள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளும் இந்த குளத்தில் கரைக்கப்பட்டது. இதனால் குளம் மாசுபடுவதை தவிர்க்க குளத்தின் அருகே உள்ள தொட்டியில் தற்போது சிலைகள் கரைக்கப்படுகிறது. அதில் குப்பைக்கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. குப்பைக்கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories: