நீர் நாய்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை

மன்னார்குடி : வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பட்டியல் விலங்காக வகைப்படுத்த பட்டுள்ளதாலும், பாலூட்டி விலங்கு வகையை சேர்ந்த அழிந்து வரும் ஒரு உயிரினமாகவும் நீர் நாய்கள் விளங்குவதால் அவற்றை துன்புறுத்துவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : திருவாரூர் மாவட்டம் வடுவூரில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஏரி, கண்ணனாறு -பாமணியாறு ஒன்றாக கலக்கும் செருகளத்தூர், திருவாரூர் அடுத்த தேவநதி, ஓடாச்சேரி மற்றும் நன்னிலம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆறுகள் மற்றும் ஈர நிலங்களில் அரியவகை நீர் நாய்கள் தென்படுகின்றன.

நீர்நாய் பாலூட்டி விலங்கு வகையை சேர்ந்த அழிந்து வரும் ஒரு உயிரினமாகும். மிகவும் தட்டை போன்ற கால்களை உடையது. மீன்கள் அதிகளவில் வசிக்கும் இடங்களில் வாழும். உயிர்ச்சூழல் மண்டலத்தில் நீர் நாய்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. நீர்நாய்கள் கூச்ச சுபாவம் கொண்டவை யாக இருப்பதால் மனிதர்களை கண்டால் ஒளிந்து கொள்ளும் தன்மை கொண்டது.

அழிவின் பிடியில் உள்ள நீர் நாய்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.

1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நீர் நாய்கள் பட்டியல் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீர் நாய்களை எவரேனும் துன்புறுத்துவது அல்லது அச்சுறுத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

Related Stories: