×

வேலூர் பாலாற்றில் நுரையுடன் கழிவுநீர் சென்ற விவகாரம் பழுதான சுத்திகரிக்கும் கருவியை சரி செய்ய விழுப்புரத்துக்கு அனுப்பி வைப்பு-24ம் தேதிக்குள் சீரமைக்க கமிஷனர் உத்தரவு

வேலூர் : வேலூர் பாலாற்றில் நுரையுடன் சென்ற கழிவுநீர் விவகாரத்தில் சுத்திகரிக்கும் கருவியை சரி செய்ய விழுப்புரம் கொண்டு சென்றனர். வரும் 24ம் தேதிக்குள் சரி செய்து, பைப் லைன்களையும் சரி செய்ய அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பாலாறு விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. பாலாற்றில் ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது, தோல் மற்றும் ரசாயனக் கழிவுகள், மணல் கொள்ளை என்று பலமுனை தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாலாறு சிக்கித் திணறுகிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன், முத்துமண்டபம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வெளியேறும் நீர் கொண்டு செல்லும் பைப்லைன் ேசதமடைந்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கழிவுநீர் சுத்திகரிக்காமலேயே, நுரையுடன் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் பாலாற்றில் ஓடும் கழிவுநீர், நுரை பொங்கிச்சென்று நிலத்தடி நீரை மாசடைய செய்கிறது. எனவே பாலாற்றில் நுரை பொங்கி செல்லும் கழிவுநீரை தடுத்து நிறுத்தி, கழிவுநீரை சரியான முறையில் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்று தினகரன் நாளிதழில் கடந்த 20ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், ‘வேலூர் பாலாற்றில் நுரை பொங்கியவாறு செல்லும் கழிவுநீரை ஆய்வு செய்தார். அப்போது தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் முத்துமண்டபம் அருகே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது சுத்திரிக்கும் கருவி 20 சதவீதம் வரையில் சரியாக சுத்திகரிக்காததும், ஒரு கருவி மட்டும் பழுதாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கமிஷனர் உத்தரவின்பேரில், பழுதான கருவியை சரி செய்ய, மாநகராட்சி ஊழியர்கள் விழுப்புரத்திற்கு கருவியை கொண்டு சென்றனர். மேலும் வரும் 24ம் தேதிக்குள் சரி செய்து கழிவுநீரை சுத்திகரித்து, ரங்காபுரம் ஏரியில் விட கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆய்வின்ேபாது, மாநகராட்சி பொறியாளர் ரவிசந்திரன், உதவிபொறியாளர் ேமாகன், பழனி உள்ளிட்டோர் இருந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 3 முறை சுத்திரிக்கும் அளவீடு பதிவு செய்யப்படுகிறது. ஒரு கருவி மட்டும் பழுதாகி இருந்ததால், பாலாற்றில் நுரைபொங்கி கழிவுநீர் கலந்துள்ளது. அந்த கருவியை சரி செய்ய விழுப்புரத்திற்கு மாநகராட்சி குழுவினர் எடுத்து சென்றுள்ளனர். வரும் 24ம் தேதிக்குள் சுத்திகரிப்பு கருவி மற்றும் பைப்லைன்களையும் சரி செய்து, ரங்காபுரத்தில் உள்ள ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளேன், என்றார்.


Tags : Velur Balat ,Shaluppuram , Vellore: Villupuram was taken to fix the purifier in the case of a sewage that went with foam in the Vellore lake. Coming up on the 24th
× RELATED நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்ச...