×

வேலூர் தோட்டப்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

* சங்கரன்பாளையத்தில் பாஜவினர் போராட்டம்

* அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை

வேலூர் : இரண்டு மாதங்களாக தங்களுக்கு சரிவர குடிநீர் சப்ளை செய்யப்படாததை கண்டித்து தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரியதெரு மக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வேலூர் மாநகராட்சி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் வழங்குவதில் மூன்று மாதங்களுக்கு மேல் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன்கள் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், பல இடங்களில் சேதமடைந்ததுமே காரணம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன் சேதங்களை சீரமைக்கும் பணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் நடந்து வரும் இப்பணி இன்னும் முடிவடையாததால் மாநகராட்சி குடிநீர் வினியோகத்தில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதனால் மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வேலூர் சார்பனாமேடு, குட்டைமேடு பகுதிகளுக்கு பில்டர்பெட் சாலையில் கூடுதலாக ஒரு வால்வு அமைக்கப்பட்டு பொன்னை குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் தோட்டப்பாளையம் பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரியதெரு மக்கள் முன்னாள் கவுன்சிலர் ஜெய்சங்கர் தலைமையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மாநகராட்சி 2வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் ஆகியோர் சம்பவ இடம் வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களிடம் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதுடன், டேங்கர் லாரிகளில் உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் தங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யக்கூடாது. பைப்லைன் மூலமே குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 2 நாட்களில் பொன்னை குடிநீர் பைப் லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் வேலூர் சங்கரன்பாளையத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கூடிய 25க்கும் மேற்பட்ட பாஜவினர் சீரான குடிநீர் வினியோகம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை சரியாக செய்வது, சிதிலமடைந்த சங்கரன்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடித்து தள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், ஷியாமளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags : Vellore Estate , Vellore: Thottapalayam Arukandampoondi main road condemning the non-supply of drinking water to them for two months.
× RELATED வேலூர் ேதாட்டப்பாளையத்தில் குடிநீர்...