×

இரண்டாம் உலகப் போருக்கு பின் கொரோனாவுக்கு எதிராக யுத்தம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு பேச்சு

நெல்லை : இரண்டாம்  உலகப் போருக்கு பின்பு கொரோனாவை எதிர்த்து போரிடுவதாக நெல்லையில் நடந்த  சுகாதாரப் பேரவை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை  மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:

தமிழக அரசு சுகாதார தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  மாவட்ட சுகாதார பேரவையின் மூலம் அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதாரம் சம்பந்தமான தேவைகளை கண்டறிதல், நிவர்த்தி செய்தல், மேலும் துறைக்கும், சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதல், அனைத்து பகுதிகளிலும் முறையான சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க செய்தல் ஆகியவை முக்கிய நோக்கமாகும்.

உலகம்  முழுவதும் சுகாதாரம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சுகாதாரம் என்ற  ஒரு துறை பாதிக்கப்பட்டால், கல்வி, பொருளாதாரம், வளர்ச்சி உலக அளவில்  பெரிதும் பாதிக்கப்படும். கொரோனா காரணமாக பள்ளிகள் தொடர்ந்து  மூடப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகமே கொரோனாவை  எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சுகாதார திட்டங்கள்  நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக  இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் தான் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. நெல்லை மாவட்டம்,  விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு  மையமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும், நெல்லைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்  இன்னமும் தொடர்ந்து வருகிறது. 2வது அலையை எளிதில் கட்டுப்படுத்தினோம்.  3வது அலையை சந்திப்பதற்கான அனைத்து உள்கட்டமைப்புகளும் தயார் நிலையில்  உள்ளன. இனி அடுத்த அலை வருமா? என்று தெரியாது. எதற்கும் நாம் தயார்  நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை அரசு  மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர்  வெங்கட்ரங்கன், துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணலீலா, மருத்துவக்கல்லூரி பேராசிரியை சுமதி  மற்றும் சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.

அரசு மருத்துவமனைகளில் 51 சதவீதம் பிரசவம்

கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணலீலா பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 657 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 915, அரசு மருத்துவமனைகளில் 1,691, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 ஆயிரத்து 561 என மொத்தம் 51.62 சதவீதம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 8 ஆயிரத்து 490 பிரசவங்கள் நடந்துள்ளன. இது 48 சதவீதம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vishnu ,Corona ,World War II. , Nellai: Collector at the Health Council meeting in Nellai to fight against corona after World War II.
× RELATED இந்தியா கூட்டணி பிரசாரத்தில் ரகளை பாஜக கவுன்சிலர் மீது வழக்கு