ஐஏஎஸ் விதியில் மாற்றம் ஏன்?: மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு பழி

புதுடெல்லி: ஒன்றிய அரசுப் பணிக்கு போதுமான ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்ப மறுப்பதாலேயே, ஐஏஎஸ், ஐபிஎஸ் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு மாற்ற மாநில அரசுகளின் அனுமதியை பெற வேண்டும் என சட்ட விதிமுறை உள்ளது. இதை மாற்றி, மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே அதிகாரிகளை மாற்றம் செய்ய ஒன்றிய அரசுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் ஐஏஎஸ் விதிகள் 1954ல் திருத்தம் செய்யும் வரைவு விதிகளை ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கடந்த டிசம்பர் மாதம் தயாரித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டது. இம்மாதத்திலேயே 2 முறை நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விதிமுறை மாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘பெரும்பாலான மாநில அரசுகள், ஒன்றிய அரசின் பணிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை வழங்கும் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இது ஒன்றிய அரசின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லை. அதோடு, ஒன்றிய அரசின் செயல்பாட்டையும் இது பாதிக்கிறது. புதிய கொள்கைகளை உருவாக்குதல், திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் பற்றாக்குறையால் பணிகள் சரி வர நடப்பதில்லை. மேலும், மாநில அரசிடம் பணியாற்றியதன் மூலம் மிகுந்த கள அனுபவம் பெற்றிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றப்படுவது ஒன்றிய, மாநில இரு அரசுகளுக்கும் நன்மை தரும். இதன் காரணமாகவே ஐஏஎஸ் விதியில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒன்றிய அரசு பணிக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் எண்ணிக்கை கடந்த 2011ல் 309 ஆக இருந்த நிலையில் தற்போது இது 223 ஆக குறைந்துள்ளது.

* புதிய விதியின்படி, ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுவது தொடர்பாக குறிப்பிட்ட கால அவகாசத்தில் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும், இல்லாவிட்டால் அவகாசம் முடிந்ததும் சம்மந்தப்பட்ட அதிகாரி தாமாக ஒன்றிய அரசு பணிக்கு மாற்றப்படுவார்.

Related Stories: