×

கடந்த ஆண்டு 6,039 பேர் பாதிப்பு நடப்பாண்டில் டெங்கு பரவல் வேகம் குறைந்தது; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பரவல் வேகம் குறைந்திருப்பதாகசுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் 8,527 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2020ல் டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்துள்ளது. அந்த ஆண்டில், தமிழகத்தில் மொத்தம் 2,410 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் குணமடைந்தனர்.இந்நிலையில் கடந்த  ஆண்டில் 6,039 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

150க்கும் மேற்பட்டோருக்கு சிக்குன் குனியா, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மலேரியா, 1,028 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலி காய்ச்சல், 2,220 பேர் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன் டெங்கு, ஜிகா, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. மழை பொழிவுக்கு பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயின்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் உற்பதியாகக்கூடும். அதனால் அந்த பொருட்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பயனாக நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : Dengue , The spread of dengue slowed down to 6,039 cases last year; Health officials informed
× RELATED வல்லநாடு ஊராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்