ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு செயலாளர் நியமனம்

சென்னை:  ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, ஆணையத்தின் செயலாளராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென கடந்த 2018ம் ஆண்டில் அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய செயலாளராக கோமளா நியமனம் செய்யப்பட்டார்.  இவர், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஒருவரின் மனைவி என்று தெரிகிறது. இதனால், அவரை மாற்றம் வேண்டும் என்று சசிகலா தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர் மாற்றப்படவில்லை.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற  உத்தரவின் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டு விசாரணை விரைவில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆணையத்தின் கால அவகாசமும் வரும் 24ம் தேதியுடன்  நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், ஆணையத்தின் செயலாளர் கோமளா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய செயலாளராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் முடிவடையுள்ளது. இந்த நிலையில், மீண்டும் மருத்துவ குழு அமைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவிடம் நேரடி விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

எனவே, ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. விரைவில் ஆணையத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, விசாரணை ஆணையம் சார்பில் 90% விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் மருத்துவக்குழு அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்துமா, இல்லை அப்போலோவின் அறிக்கையின் அடிப்படையில் அந்த மருத்துவமனை டாக்டர்களிடம் மட்டும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கால அவகாசம் முடிவதற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: