×

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக 12,820 இடங்களில் தனித்து போட்டி; ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

சென்னை:  தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். அதேநேரத்தில் பாமகதான் அதிமுக தோல்விக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியிருந்தார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அது முதல் அதிமுக, பாமக தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில், தற்போது நடைபெற உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல் அடுத்த மாதம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஊரக உள்ளாட்சிகளின் ஒரு பகுதிக்கு மூன்று ஆண்டுகளும், மற்ற பகுதிகளுக்கு ஐந்து ஆண்டுகளும் தாமதமாக தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு ஆளாகியிருக்கிறது. அடுத்த மாதத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான அறிவிப்பு எந்த  நேரமும் வெளியிடப்படக்கூடும். தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து ஒரு நாள் இடைவெளியில்  வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விடும். இதை உணர்ந்து கொண்டு தேர்தலுக்கு தயாராக வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.  இந்த பதவிகள் அனைத்துக்கும் கட்சி சின்னங்களின் அடிப்படையில் தான் தேர்தல் நடைபெறும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 12,820 இடங்களிலும் பாமக வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும். வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பிறகு நானும், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவின்  மூத்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்யவிருக்கிறோம். அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். 2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நமது ஒற்றை இலக்கு அதிக இடங்களில் வெற்றிகளை குவித்து நகர்ப்புறங்களை நமது வசமாக்க வேண்டும் என்பது தான். இந்த உன்னத இலக்கை எட்டுவதற்கான பணிகளை பாமக மாவட்ட செயலர்கள் தொடங்கி கடைநிலைத் தொண்டன் வரை அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு பாமகவினர் அனைவரையும் நான் சந்திக்கும் நிகழ்வு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விழாவாகவே இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pamaka ,Tamil Nadu , Pamaka contests 12,820 seats in Tamil Nadu urban local body elections; Ramadan sensational report
× RELATED தேர்தல் அலுவலகம் திறக்க முடியாமல்...