×

திருப்போரூர் கந்தசாமி, மாமல்லபுரம் ஆளவந்தான் கோயில்களின் சொத்துகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்போரூர்  கந்தசாமி  கோயில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தான் கோயிலுக்கு  சொந்தமாக சுமார் 60 ஆயிரம் கோடி மதிப்புடைய 2000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த  சொத்துகளை அபகரிக்க  20க்கும் மேற்பட்ட குழுக்கள் முயற்சி செய்து  வருகின்றன. அதனை தடுத்து நிறுத்தி கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை   வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்யவும், அதன் அறிக்கையை  தாக்கல்  செய்யவும் வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத்  மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர்.
அந்த மனுக்களில், கோயிலுக்கு சொந்தமான  சொத்துகள்  பதிவேட்டை தாக்கல் செய்ய கோயிலின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட  வேண்டுமெனவும், கோயிலின் சொத்துகளை வேறு யாருக்கும் பெயர் மாற்றம்  செய்யக்கூடாது எனவும் பதிவுத்துறை தலைவர், திருப்போரூர் சார்பதிவாளருக்கு உத்தரவிட கோரியிருந்தனர்.  

இந்த வழக்கை  விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தான்  கோயிலின் சொத்துகளை மறு உத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு  செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.  இந்நிலையில்,  ராதாகிருஷ்ணன்  தாக்கல் செய்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்  பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், கோயில்களின் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 19.71 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு  மீட்கப்பட்டுள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஏப்ரல் 13ம்  தேதிக்குள் மீட்டுவிடுவோம் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டதுடன். கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு  அகற்றம் தொடர்பான அறிக்கையை மே 10ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  உத்தரவிட்டனர்.

Tags : Thiruporur Kandasamy ,Mamallapuram Alavanthan ,Treasury , Thiruporur Kandasamy, Mamallapuram Alavanthan to recover the property of the temples and file a report; High Court order to the Treasury
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பரிவேட்டை உற்சவம் விமரிசை