×

ஆஸ்திரேலியாவில் அக். 16ம் தேதி தொடக்கம் 8வது டி.20 உலக கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் அக். 23ல் மோதல்

சிட்னி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை தொடர் நடத்தப்பட இருந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா நடத்திய உலக கோப்பை டி.20 தொடரில் பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 8வது டி.20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவ. 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான அட்டவணை இன்று காலை வெளியிடப்படடது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் ஏ, பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணி சூப்பர் 12க்கு தகுதி பெறும். முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா மற்றும் 2 தகுதி சுற்று அணி, குரூப் பி பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஸ்காட்லாந்து மற்றும் தகுதி சுற்றில் இருந்து 2 அணி பங்கேற்கும். முதல் சுற்று போட்டிகள் அக்டோபர் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.

சூப்பர் 12 சுற்றுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன, முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் இதில் இணையும். இதில் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். கடந்த உலக கோப்பையை போல் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன. சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் முதல் சுற்றில் குரூப் ஏ -வில் முதல் இடம் பிடிக்கும் அணி, குரூப் 2ல் 2ம் இடம் பிடிக்கும் அணி இணையும்.

சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா மற்றும் முதல் சுற்றில் குரூப் ஏ-வில் 2ம் இடம் பிடிக்கும் அணி மற்றும் குரூப் பி-ல் முதல் இடம்பிடிக்கும் அணி இணையும். சூப்பர் 12 போட்டி அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ரன்னரான நியூசிலாந்தும் சிட்னியில் மோதுகின்றன. தினமும் 2 போட்டிகள் நடக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை அக்.23ம் தேதி சந்திக்கிறது.

இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. கடந்த உலக கோப்பையிலும் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். முதல் அரையிறுதி போட்டி நவ. 9ம் தேதி சிட்னியிலும், 2வது அரையிறுதி 10ம்தேதி அடிலெய்டிலும் நடக்கிறது. இறுதி போட்டி நவ. 13ம் தேதி அடிலெய்ட்டில் அரங்கேறுகிறது.

சூப்பர் 12ல் இந்தியா மோதும் போட்டிகள்
அக். 23: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்போர்ன்)
அக். 27: இந்தியா vs குரூப் ஏ ரன்னர்-அப் (சிட்னி)
அக். 30: இந்தியா vs தென்னாப்பிரிக்கா (பெர்த்)
நவ. 2: இந்தியா vs பங்களாதேஷ் (அடிலெய்டு)
நவ. 6: இந்தியா vs குரூப் பி வெற்றியாளர் (மெல்போர்ன்)

Tags : Australia ,8th ,T20 World Cup Series ,India ,Pakistan , Australia, Oct. 16th, 8th T20, World Cup
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை