ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூரில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்-26 பேர் காயம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர்  கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 22 பேர் காயமும், 4 பேர் படுகாயமும் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் கிராமத்தில் 51ம் ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊர் கவுண்டர் வி. சிகாமணி தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி, ஒன்றிய சேர்மன் எஸ்.சத்யா சதீஷ்குமார் ஆகியோர் விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த எருது விடும் விழாவில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காளைகள் போட்டியில் பங்கேற்கபட்டது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ₹75 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ₹60 ஆயிரமும், 3வது பரிசாக 50 ஆயிரம் உள்ளிட்ட 30 பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மந்தையில் சீறிப்பாய்ந்த காளைகளை 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று காளைகள் மீது கை போட்டனர்.

இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 22 பேர் காயமும், 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர்கள்  முதலுதவி சிகிச்சை செய்தனர். படுகாயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்று அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரிசுகள் வழங்குவதில் குளறுபடி

எருது விடும் திருவிழா முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதல் பரிசு வென்ற எருதின் நேரத்தையும், கடைசி பரிசு வென்ற எருதின் வேகத்தையும் அறிவித்து பரிசு வழங்கினார். கடைசி பரிசுகளும் எருதின் நேரம் 19.03 பாயிண்ட் என அறிவித்து இதற்கு முன்னதாக ஓடிய 5 காளைகளுக்கு பரிசு ஏதும் வழங்காததால் எருதின் உரிமையாளர்கள் ஒன்றுசேர்ந்து ஊர் கவுண்டர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் விழாவில் ஓடாத எருதுகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் நுழைவு கட்டணம் செலுத்திய தொகையை திரும்ப வழங்கக்கோரி சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதி நேரத்தை விட கூடுதலாக விழா நடத்திய குழுவினர்

மூக்கனூர் கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி  கொடுத்த நிலையில் விழாக்குழுவினர் அளவுக்கு அதிகமாக காளைகளுக்கு டோக்கன் வழங்கி எருதுவிடும் விழாவை நடத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கூடுதலாக எருது விடும் விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறை விழாவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை அளித்தும் மீண்டும் மீண்டும் காளைகளை ஓட விட்டதால் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த அனைத்து காவலர்களும் பாதுகாப்பு அளிக்காமல் திரும்பிச் செல்ல முயன்றனர்.

Related Stories: