பெரம்பலூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அதிமுக நகர செயலாளர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வினோத் (48). பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர். பூலாம்பாடி சிவன் கோயில் தெருவை சேர்ந்த 40 வயதான பெண், இன்டேன் காஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கணவர் மாற்றுத்திறனாளி. இவர், சுயநினைவு இல்லாமல் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினோத், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாற்றுத்திறனாளி மனைவியிடம் பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது ஆசைக்கு இணங்கும்படி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண், தனது காஸ் கம்பெனிக்கு சென்று வரும் போது எல்லாம் வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வந்ததோடு, குடும்பத்தோடு காஸ் கம்பெனியிலேயே வைத்து கொளுத்தி விடுவேன் என அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் காஸ் கம்பெனியில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த மாற்றுதிறனாளியின் மனைவியை வினோத் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த பெண் சத்தம் போடவே கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வினோத்தை நேற்று கைது செய்தனர்.

கட்சியில் இருந்து நீக்கம்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூலாம்பாடி பேரூராட்சி செயலாளர் வினோத், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: