×

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2வது கட்டப்பணிகள் ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக தர்மபுரி மாவட்டத்தில் ரூ.56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் செலவில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,587 பயனாளிகளுக்கு ரூ.157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்னுடைய வாழ்க்கையில் நீ எதையாவது சாதித்திருக்கிறாயா என்று கேட்டால், பட்டியல் போடும்போது நிச்சயம் இடம் பெறும் மகத்தான திட்டம் தான் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.
கலைஞாின் சிந்தனையில் உதித்த திட்டம் அந்த திட்டம். அன்றைக்கு நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்து அந்த திட்டத்தை செயல்படுத்த நான் எந்த அளவிற்கு முனைப்பாக இருந்தேன் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சுமார் 80 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஆட்சி, அந்த திட்டத்தை முடக்கி வைத்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நானே தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று அங்கிருக்கக்கூடிய மக்களையெல்லாம் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினேன். அதன்பிறகு தான் வேறு வழியில்லாமல் அந்த திட்டத்தை கடந்த கால அரசு நிறைவேற்றியது. எனவே தான் தர்மபுரியை நினைத்தால் என்னுடைய நினைவிற்கு வருவது ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், அதை மறக்கவே முடியாது. இப்போது இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை மேலும் உயர்த்தும் வகையில், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும். அதுமட்டுமல்ல, இன்னும் சில அறிவிப்புகளை நான் இங்கு கூற இருக்கிறேன்.

* சேலம் - தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேலும் எளிதாக்க கூடிய வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூருக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூருக்கும் இடையே புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும்.
* அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
* புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக தர்மபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும். இதுபோன்ற விழாக்கள் இனிமேல் அடிக்கடி நடக்கும். இங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் என்றார்.

Tags : Okanagan ,Chief Minister ,MK Stalin , 2nd phase of Okanagan joint drinking water project to be implemented at an estimated cost of Rs 4,600 crore: Chief Minister MK Stalin's announcement
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி