×

வலைகளை வெட்டி வீசியது இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் மோதி விசைப்படகு மூழ்கடிப்பு

* ஏழு மீனவர்கள் கடலில் தத்தளிப்பு
* ராமேஸ்வரத்தில் மீண்டும் பரபரப்பு

ராமேஸ்வரம்: இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவரின் படகு கடலில் மூழ்கியது. 7 மீனவர்கள் மீட்கப்பட்டு கரை திரும்பினர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் தங்களது படகுகளை திருப்பிக் கொண்டு, வேறு பகுதிகளுக்கு சென்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை விடாமல் துரத்தி வந்து வலைகளை பறித்து, வெட்டி கடலில் வீசினர். இதனால் மிரண்டு போன மீனவர்கள், ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு திரும்பினர்.

அப்போது துரத்தி வந்த இலங்கை ரோந்து கப்பல், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் வஸ்தியான் படகின் மீது மோதியது. இதில் படகின் பின்பகுதி உடைந்ததால் கடல்நீர் புகுந்து படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த மீனவர்கள், அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சேசு ஆரோக்கியநாதனுக்கு சொந்தமான படகில் இருந்த மீனவர்களுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்த மிக்கேல் சந்தியா, பிரிஸ்மென், சுரேந்திரன், ஆகாஷ், டைடன், சேதுராமன், ஜெயபாலன் ஆகிய 7 மீனவர்களையும் மீட்டனர். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் மீன் பிடிக்க முடியாமல், குறைந்த அளவு மீன்களுடன் நேற்று காலை மீனவர்கள் கரை திரும்பினர். ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்கச்சிமடம் மீனவரின் படகு கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : The nets were cut by a Sri Lankan naval patrol vessel, which sank
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்