×

வருமானத்திற்கு அதிகமாக அதிமுக மாஜி அமைச்சர் அன்பழகன் ரூ.11 கோடிக்கு சொத்து வாங்கி குவிப்பு: கிரானைட் நிறுவனம், குவாரிகளில் கோடிக்கணக்கில் முதலீடு; லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்ஐஆரில் பரபரப்பு தகவல்

சேலம்: அதிமுக மாஜி அமைச்சர் கே.பி. அன்பழகன் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர் பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கிரானைட் நிறுவனங்கள், குவாரிகளில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் கெரகோடஅள்ளியை சேர்ந்த கே.பி.அன்பழகன், தொடர்ந்து 5 முறை பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதாக தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கே.பி.அன்பழகன், தொடர்ந்து 5 முறை  பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2016 மற்றும் 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சொத்து தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அன்பழகன் தாக்கல் செய்துள்ளார். அப்போது குடும்பத்தலைவர் என்ற முறையில் தனக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரங்களை சமர்ப்பித்துள்ளார். 2016ம் ஆண்டு பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும்போது அன்பழகன் மற்றும் அவரது மனைவி, மகன்கள் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரத்து 859. வங்கியில் இருந்த பணம், நிலம், கட்டிடம், தங்கநகைகள், முதலீடு, மோட்டார் வாகனங்கள், வீடு என்று அனைத்தையும் சேர்த்தே இந்த சொத்து கணக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி. அன்பழகன் 23.5.2016 முதல் 6.5.2021 வரை பதவி வகித்தார். வேளாண்மைத்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். அப்போது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் சொத்து சேர்த்ததாக கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உரிய விசாரணை நடத்தும் படி உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் விசாரணை நடத்தியதில் அவரது பெயரிலும், மனைவி, மகன்கள், மருமகள் பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாக்யலட்சுமி திரையரங்கில் 50 சதவீதம் பங்குகள், எஸ்எம்பி மெட்டல்ஸ் நிறுவனத்தில் 50 சதவீதம் பங்குகள், சாய் இம்பெக்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர், ஏஎம்பிஎஸ் நிறுவனங்களின் பங்குதாரர் என்று அவரது இளைய மகன் சசிமோகன் பெயரில் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளது. மூத்த மகன் சந்திரமோகன் பெயரில் அன்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக், மனைவி மல்லிகா பெயரில் ஸ்ரீபாக்யலட்சுமி எண்டர் பிரசைஸ் நிறுவனம், சரஸ்வதி பழனியப்பன் கல்வி அறக்கட்டளை நிறுவனம் போன்றவை இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி உறவினர்கள் சரவணன், செந்தில்குமார், பினாமி ஜெயபால், மருமகன் சிவக்குமார் ஆகியோர் பெயரிலும் குவாரிகள், கிரஷர்கள், கிரானைட் தொழிற்சாலைகளை வாங்கி குவித்துள்ளார். இந்தவகையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.34 கோடிக்கு மேல் சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அன்பழகன் தனது பெயரிலும், குடும்பத்தார் பெயரிலும் பணம், நிலம், கட்டிடங்கள், தங்க நகைகள், வணிகத்தில் முதலீடுகள், மோட்டார் வாகனங்கள், விவசாய நிலங்கள், நிலையான வைப்புத்தொகை, ஆலைகள், இயந்திரங்கள் என்று வாங்கிக்குவித்த சொத்துக்களின் மதிப்பு ரூ.21 கோடியே 43 லட்சத்து 35ஆயிரத்து 418. அன்பழகன் குடும்பத்தினர், தேர்தல் ஆணையத்திடம் காட்டிய சொத்துப்பட்டியல் படி கிடைத்த வருமானத்தில் ரூ.10 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 663 மட்டுமே சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ரூ.11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 மதிப்பில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். மேற்கண்டவாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,minister ,Anpalagan ,Granite ,Anti-Corruption Police , AIADMK ex-minister Anpalagan buys assets worth over Rs 11 crore: Granite company invests crores in quarries; Sensational information in the Anti-Corruption Police FIR
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி