யு-19 உலக கோப்பை: காலிறுதியில் இந்தியா

டரோபா: வெஸ்ட் இண்டீசில் நடக்கும்  ஐசிசி யு-19  ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  இந்தியா காலிறுதியை உறுதி செய்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 16 நாடுகள் பங்கேற்கும்  ஐசிசி யு-19 ஒருநாள் உலக கோப்பை போட்டி நடக்கிறது. அதில் பி பிரிவில் உள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை 45ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்த நடந்த 2வது ஆட்டத்தில் அயர்லாந்தை  எதிர்கொண்டது.  இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்த இந்த ஆட்டத்தில் முதலில் களம் கண்ட இந்தியா 50ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 307ரன் குவித்தது.

அடுத்து விளையாடிய அயர்லாந்து 39ஓவரிலேயே எல்லா விக்கெட்களையும் இழந்து 133ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியா 174ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 புள்ளிகளுடன் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. பி பிரிவில் உள்ள எல்லா அணிகளும் இன்னும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத உகாண்டா நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. தலா 2 புள்ளிகளுடன் உள்ள தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகளும் மோத உள்ளன. இந்த 2 ஆட்டங்களின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இந்தியா சூப்பர் லீக் காலிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி விட்டது.

Related Stories: