×

அரசு மருத்துவமனை தீ விபத்தில் துரிதமாக செயல்பட்டு 58 பேரின் உயிர்களை காப்பாற்றிய ஆண் செவிலியர்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு அழைத்து பாராட்டு..!!

சென்னை: சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 குழந்தைகள் உட்பட 58 பேரின் உயிரை காப்பாற்றிய செவிலியர் ஜெயகுமாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையின் 2வது தளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கின் செவிலியர் ஜெயகுமார் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்த தீயணைப்பான்கள் உதவியுடன் தீயை அணைத்தார். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பே துரிதமாக செயல்பட்டு அங்கிருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களை காப்பாற்றினார். 
இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டுபத்திரம் மற்றும் பொற்கிழி வழங்கி பெருமைப்படுத்தினார். ஜெயக்குமார் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் 47 பச்சிளம் குழந்தைகள் உட்பட 58 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தீ தடுப்புக்கான பயிற்சி பெற்றதால் தீயணைப்பான்களை வைத்து தீயை கட்டுப்படுத்த முடிந்ததாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை அழைத்து பாராட்டு தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

The post அரசு மருத்துவமனை தீ விபத்தில் துரிதமாக செயல்பட்டு 58 பேரின் உயிர்களை காப்பாற்றிய ஆண் செவிலியர்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு அழைத்து பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Kasthuribai Maternity Hospital ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...