×

பள்ளியில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் வரவழைக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

திருவள்ளூர்: பள்ளிக்கு ஆசிரியர்களை சுழற்சிமுறையில் வரவழைக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், பள்ளிக் கல்வி ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் அ.மா.மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், மாநில நிர்வாகிகள் சேது செல்வம், ஜெயக்குமார், ஆர்.கே.சாமி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து கொண்டே உள்ளது. இந்த சூழலில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை வல்லுனர்கள் ஆகியோருடன் தமிழக முதல்வர் ஆலோசித்து கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மாணவர்களை காப்பாற்ற, வரும் 31ம் தேதி வரை 1 முதல் 12ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்துள்ளார். இந்த முடிவை நமது பேரியக்கம் வரவேற்கிறது.

ஆனால் நமது பள்ளி கல்வித்துறை அனைத்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் இல்லையெனில் ஆசிரியர்களுக்கும் வேலை இல்லை. மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் யாருக்கு கற்பிக்க போகிறார்கள். வேறு சில நிர்வாக பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் என விரும்பினாலும், அதற்காக ஒட்டு மொத்த  ஆசிரியர்களையும் தினமும் வரவழைப்பது அவசியம் இல்லை. எனவே சுழற்சி முறையில் ஆசிரியர்களை பள்ளிக்கு  வரவழைக்க வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அதேபோல ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளையும் தாற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Graduate Teachers Association , Teachers should be recruited in rotation in the school: Graduate Teachers Association Request
× RELATED உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி...